
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பு சந்தேகமாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்ந்தார். அதேபோட்டியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட முதுகு வலி பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யுமாறு தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவக்குழு ஆலோசனை வழங்கியது. அறுவை சிகிச்சை செய்தால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், என்சிஏவின் ஆலோசனையை ஸ்ரேயாஸ் ஐயர் மறுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது மருத்துவர்களில் ஆலோசனைப்படி வீட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் ஓய்வெடுத்து வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலக இருக்கிறார்.