இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல - கேஎல் ராகுல் காட்டம்!
ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான முக்கிய தொடர் இதுவாகும். எனவே இதுகுறித்து பேச நேற்று கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஸ்டரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேஎல் ராகுல் மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் 122 தான் அவரின் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
Trending
இந்நிலையில் இதற்கு காரசாரமான பதிலை அவர் கொடுத்தார். அதில், “இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல, ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது. இதுவரை எவருமே கரியர் முழுவதும் அதே ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்ததும் கிடையாது. சில சமயங்களில் குறையதான் செய்யும்.
ஒரு சில சமயங்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது முக்கியம் என்றால் நிச்சயம் அதனைதான் செய்வோம். இதுவே ஒரு வீரர் 100 அல்லது 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினால் கூட வெற்றி கிடைக்கும் என்றால் அதனை தான் செய்வோம். எனவே வீரரின் ஒட்டுமொத்த பேட்டிங் வேகத்தை பாருங்கள். ஒருகுறிப்பிட்ட போட்டியை வைத்து பார்க்கக்கூடாது.
கடந்த 10 - 12 மாதங்களாக அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குறிக்கோளை கொடுத்துள்ளனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அனைத்து வீரர்களும் அறிவார்கள். அந்தவகையில் ஒரு ஓப்பனிங் வீரராக எனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை செய்ய சில மாற்றங்களை செய்து வருகின்றேன்” என கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான கே.எல்.ராகுல் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 1,963 ரன்களை சேர்த்துள்ளார். அவரின் ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 140.92 ஆகும். காயத்தில் இருந்து மீண்டும் சமீபத்தில் அணிக்கு திரும்பிய அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் தேவைப்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now