
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை இலங்கையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அதில் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாக் அவுட் சுற்றிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இருப்பினும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் 350க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து வெற்றி வாகை சூடியது.
ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக லீக் சுற்றில் சதமடித்த தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் நிக்கின் ஜோஸ் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நடுவர்கள் வழங்கிய கண்மூடித்தனமான தீர்ப்பு இந்தியாவின் தோல்வியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது. இருப்பினும் அந்த தொடரில் விளையாடிய இந்திய வீரர்களில் யாருமே ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடிய அனுபவத்தை கொண்டிராத போதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது.
ஏனெனில் இதே தொடரில் விளையாடிய பெரும்பாலான அணிகளில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருந்தார்கள். குறிப்பாக இளம் வீரர்களுக்காக நடத்தப்பட்ட இந்த தொடரில் 2015 உலகக்கோப்பை உட்பட 149 சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவத்தை கொண்ட சௌமியா சர்க்கார் வங்கதேச அணிக்காக விளையாடினார். அதே போல கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமத் ஹரிஸ் உட்பட நிறைய வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.