-mdl.jpg)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன்2 தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தாம்டன்ஷைர் - டெர்பிஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நார்த்தாம்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நர்த்தாம்டன்ஷைர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிரித்ரி ஷா, கஸ் மில்லர், புரோக்டர், ஜேம்ஸ் சேல்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் விளையாடிய வீரர்களில் சைஃப் ஸைப் 90 ரன்களையும், ஜஸ்டின் பிராட் 45 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதன்மூலம் நார்த்தாம்டன்ஷைர் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெர்பிஷைர் அணி தரப்பில் ஸாக் சேப்பல், ஆண்டர்சன், ஜேக் மோர்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டெர்பிஷையர் அணியில் லூயிஸ் ரீஸ் 50 ரன்களையும், மேட்சன் 47 ரன்களையும், புரூக் கெஸ்ட் 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெர்பிஷைர் அணியானது 165 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.