
ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சென், சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அருமையாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டனர்.
இவர்களில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் 2வது அதிவேக பந்தை வீசினார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான் ஃபைனலுக்கு முன் வரை அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் ஒருபந்தை வீசி அவரை முந்தினார் ஃபெர்குசன்.
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 14 லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை உம்ரான் மாலிக்கே வீசியிருந்தார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசும் உம்ரான் மாலிக், தனது அதிவேகமான பந்துவீச்சால் எதிரணி வீரர்களை அலறவிட்டார். இந்தசீசனில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்ததுடன், ஐபிஎல் 15வது சீசனின் முடிவில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் பெற்றார்.