
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், 162 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் வில் யங் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜேக்கப் டஃபி 36 ரன்களிலும், டெவான் கான்வேவும் 18 பவுண்டரிகளுடன் 153 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - ஹென்றி நிக்கோலஸ் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களின் சதங்களைப் பதிவுசெய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.