NZ vs AUS, 1st T20I: மார்ஷ், டேவிட் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி வெலிங்டனில் இன்று தொடங்கிய முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டியதன் மூலம் முதல் 6 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 68 ரன்களை குவித்தது.
இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டெவான் கான்வேவுடன் இணைந்த ரச்சின் ரவீந்திராவும் அதிரடி காட்டினார். தொடர்ந்து இருவரும் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் டெவான் கான்வே தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அணியை வலிமையான நிலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 2 பவுண்டரி 6 சிக்சர்கள் என 68 ரன்களில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த டெவான் கான்வேவும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - மார்க் சாப்மேன் ஆகியோரும் அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 19 ரன்களையும், மார்க் சாப்மேன் 17 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னரும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 25 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த ஜோஷ் இங்லிஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 43 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவி இணை தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் அதனை பவுண்டரிக்கு அனுப்பியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 72 ரன்களையும், டிம் டேவிட் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now