
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்ற நியூஸிலாந்து அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு டுனெடின் நகரில் நடைபெற்றது.
மழையால் தலா 30 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு சோரிஃபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த ஹென்றி நிக்கோலஸும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இதனால் 5/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு மற்றொரு தொடக்க வீரர் வில் எங் மற்றும் கேப்டன் டாம் லாதம் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
அந்த வகையில் 2ஆவது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவை சரி செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து 26 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3ஆவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது கேப்டன் டாம் லாதம் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 92 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.