
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் சதமடித்து அசத்தியதுடன் 171 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும், ஒல்லி போப் 77 ரன்களையும் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்களைச் சேர்த்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் முன்னிலையும் பெற்றது.