NZ vs IND, 3rd T20I: பிலிப்ஸ் காட்டடி; சிராஜ், அர்ஷ்தீப் மிராட்டல் பந்துவீச்சு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். இந்நிலையில் போட்டி நடைபெறும் நேப்பியரில் காலை முதலே மழைபெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
Trending
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதீ முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன்னுக்கு மாற்றாக இப்போட்டியில் இடம் பிடித்த மார்க் சாப்மேன் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - கிளென் பிலீப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஆட்டத்தின் 12 ஓவர்கள் முடிக்கு பின் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த இருவரும் மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டெவான் கான்வே 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் இமாலய சிக்சர்களை பறக்கவிட்ட கிளென் பிலீப்ஸ் 31 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். இதனால் அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 ரன்களில் கிளென் பீலிப்ஸ் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிறய டெரில் மிட்செல் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசத்தொடங்கினார். இதற்கிடையில் 59 ரன்களுடன் விளையாடி வந்த டெவான் கான்வே, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து வந்த ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் முகமது சிராஜின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாட முற்பட்ட டெரில் மிட்செல் 10 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்த பந்திலேயே இஷ் சோதியும் அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்தனர்.
அதற்கு அடுத்த பந்தில் ஆடம் மில்னே சிங்கிள் ஆட முயற்சித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இது டீம் ஹாட்ரிக் ஆக பதிவானது. இதனால் 19.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now