
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் ஃபின் ஆலன் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டெரில் மிட்செல் 17, கிளென் பிலீப்ஸ் 13, மார்க் சாப்மேன் 3, மிட்செல் சாண்ட்னர் 25 ரன்கள் என ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.