
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் முதலில் நடைபெற்றுமுடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹசீபுல்லா கான் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த பாபர் ஆசாம் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 33 ரன்களுக்கு ஃபகர் ஸமானும், 38 ரன்களுக்கு முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபகர் ஸமான், முகமது நவாஸ், இஃப்திகார் அஹ்மத் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.