
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 12 ரன்னிலும், டெவான் கான்வே 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - கிளென் பிலீப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிளென் பிலீப்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்த கையோடு, 38 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் என மொத்தம் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.