
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று முந்தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தனே டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 31 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.