
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அண் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 2 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும், கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ஜனித் லியானகே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன்பின் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகே தனது விக்கெட்டை இழந்தார்.