
ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 39 ரன்கள் எடுத்த கையோடு அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 50 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி அகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
அதன்பின் இணைந்த அனபெல் சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனபெல் சதர்லேண்ட் 42 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஆஷ்லே கார்ட்னர் 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ரோஸ்மரி மைர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.