
இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் சோஃபியா டங்க்லி 2 ரன்களுக்கும், டாமி பியூமண்ட் 19 ரன்களிலும், மையா பௌச்சர் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய எமி ஜோன்ஸ் 9 ரன்களுக்கும், கிப்ஸன் 14 ரன்களுக்கும், பெஸ் ஹெத், சார்லில் டீன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹீதர் நைட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 56 ரன்களையும், சாரா கிளென் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் சோஃபி டிவைன், ரோஸ்மெரி மைர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.