
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதன் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் சூஸி பேட்ஸ் 5 ரன்னிலும், எம்மா மெக்லெட் மற்றும் ப்ரூக் ஹாலிடே தலா 6 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிலிம்மரும் 28 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய மேடி க்ரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த இஸபெல்லா கேஸ் 19 ரன்களுக்கும், ஜெஸ் கெர் 38 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். ஆனால் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடி க்ரீன் சதமடித்து அசத்திய நிலையில் 100 ரன்களுடன் கடைசி பந்தில் ரன் அவுட்டாகினார். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போலி இங்லிஸ் 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்தது.