
இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து உலகக் கோப்பையில் இடம் பிடிக்கும் முனைப்புடன் விளையாட உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் காலம் காலமாக வாய்ப்புக்கு போராடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சொல்லப்போனால் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவருக்கு எப்போதுமே இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைத்ததில்லை. மறுபுறம் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சஞ்சு சாம்சனும் சதங்களை அடித்து பெரிய ரன்கள் குவிக்காமல் இருந்து வந்ததால் அவரை கழற்றி விட்ட தேர்வுக் குழு கேஎல் ராகுல் போன்றவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தது.