-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லார்ட்ஸில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் டேனியல் லாரன்ஸ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த பென் டக்கெட் - கேப்டன் ஒல்லி போப் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தார்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 86 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்களை எடுத்துள்ளது.