
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 ஆண்டுகளாக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணியில் 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சனும், 2007ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர்.
15 ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் - பிராட் ஜோடி இங்கிலாந்து அணிக்காக அபாரமாக பந்துவீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
ஆண்டர்சன் 169 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 640 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.