
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.