
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வரும் ஜூன் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலிய அணி 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் முக்கிய வீரராக பார்க்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீக் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலியை இணைக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயின் அலியை, ஓய்வில் இருந்து மீண்டும் இங்கிலாந்து கொண்டு வந்தது. இதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோரே காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து பேசிய மொயின் அலி, “இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், எனது செல்போனுக்கு Ashes? என்று மட்டுமே ஒரு கேள்வியை அனுப்பினார். அதன்பின்னர் உடனடியாக ஓய்வில் இருந்து மீண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வந்துவிட்டேன். லீச் காயம் பற்றி அறிந்தபின், ஸ்டோக்ஸ் உடன் ஒரு உரையாடல் நடந்தது. அவ்வளவு தான். ஆஷஸ் தொடரின் ஆடவுள்ளது சிறந்த தருணமாக இருக்கப் போகிறது” என்று தெரிவித்தார்.