
இந்தியாவில் பரபரப்பாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா போராடி வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் இப்ராஹீம் ஸத்ரான் 129 ரன்கள் எடுத்த உதவியுடன் 292 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், ஜோஸ் இங்லீஷ், மார்ஷ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஆஃப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே சரிந்த ஆஸ்திரேலியா நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.
அதற்கு எதிர்ப்புறம் கேப்டன் பட் கமின்ஸ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் தொடர்ந்து அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து விளையாடியதால் காயத்தை சந்தித்த அவர் அதற்காக அசராமல் தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தம்முடைய கையை பயன்படுத்திய சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதமடித்தார்.