
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் கடந்த 2 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 282/7 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 58, ஷதாப் கான் 40, இஃப்திகார் அஹ்மது 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளும் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து 283 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65 ரன்களில் அவுட்டானார்.
அவருடன் மறுபுறம் அசத்திய இப்ராஹிம் ஸத்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பவுண்டரியுடன் 87 ரன்கள் குவித்து பாதி வெற்றியை உறுதி செய்தார். அவர்களுடன் மிடில் ஆர்டரில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சவாலை கொடுத்த ரஹ்மத் ஷா 77 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து 49 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.