
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிர் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள காரணத்தால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியிலும், மறுபக்கம் இந்திய மகளிர் அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடருக்கான மூன்று வடிவிலான இந்திய அணியிலும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷப்னம் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மகளீர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷப்னம் ஷகீலுக்கு இந்த வாய்ப்பானது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.