
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியிந்தொடக்க வீரர்கள் சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த முகமது ஹாரிஸ் - கேப்டன் சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் முகமது ஹாரிஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சலமான் ஆகாவும் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 56 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹசன் நவாஸ் மற்றும் ஷதாப் கான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் நவாஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கானும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.