
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஷான் மசூத்தும், 58 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப் ஆகியோரும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் சௌத் ஷகீல் 16 ரன்களிலும், பாபர் ஆசாம் 31 ரன்களிலும், ரிஸ்வான் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார்.