
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - ஜகிர் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 264 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது நாள் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.