PAK vs ENG, 2nd Test: 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டை போல பேட்டிங் ஆடி 51.4 ஓவரில் முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை அடித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ரூட்(8), ஹாரி ப்ரூக்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.
Trending
பின் ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடிக்க, பின்வரிசையில் மார்க் உட் அதிரடியாக ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அப்ரார் அகமது என்ற ரிஸ்ட் ஸ்பின்னர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 76 ரன்கள் மற்றும் சௌத் ஷகீல் 63 ரன்கள் என இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 79 ரன்கள் அடித்தார்.
ஹாரி ப்ரூக் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ப்ரூக் 108 ரன்களை குவித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடிக்க, 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 275 ரன்கள் அடித்தது. 354 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 356 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
அதன்பின் 356 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷாஃபிக் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். அப்துல்லா 45 ரன்களும், ரிஸ்வான் 30 ரன்களும் அடித்தனர். கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன்னில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இமாம் உல் ஹக் மற்றும் சௌத் ஷகீல் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து இருவரும் அரைசதம் அடித்தனர்.
அதன்பின் இமாம் உல் ஹக் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சௌத் ஷகீல் 53 ரன்களுடனும் அவருடன் ஃபஹீம் அஷ்ரஃப் (3) களத்தில் இருக்க, 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை பாகிஸ்தான் அடித்திருந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் முடிந்தது. இதையடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு 157 ரன்களும், இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்ததது.
இதில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஃபஹீம் அஷ்ரஃப் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய முகமது நவாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 45 ரன்கள் எடுத்திருந்த நவாஸ் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட, 94 ரன்களைச் சேர்த்து சதத்தை நெருங்கிய சௌத் சகீலின் விக்கெட்டை மார்க் வுட் கைப்பற்றினர்.
இதனால் மீண்டும் ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்து பக்கம் திரும்பியது. உணவு இடைவேளைக்கு பின் தொடங்கிய ஆட்டத்தில் அப்ரார் அஹ்மத் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸாஹித் மஹ்மூத், முகமது அலி ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க்வுட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now