
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பின்டி மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியாக கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களைப் போல் அடித்து நொறுக்கி முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் சேர்த்தது.
குறிப்பாக முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்த அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இரட்டை உலக சாதனைகளை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 122, பென் டன்கட் 107, ஓலி போப் 108, ஹரி ப்ரூக் 153 என 4 வீரர்கள் சதமடித்து அதிரடியாக ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஆமை வேக ஆட்டத்தை கையிலெடுத்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.
குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசாத் சபிக் 114 ரன்களும் இமாம்-உல்-ஹக் 121 ரன்களும் விளாசி 225 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் தனது பங்கிற்கு சதமடித்து 136 ரன்கள் குவித்தார். இருப்பினும் முகமத் ரிஸ்வான் 29, ஷகீல் 29, அசார் அலி 27 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்து அசத்தியதால் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 499/7 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின்தங்கியுள்ளது.