
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (7) மற்றும் 3ஆம் வரிசை வீரர் ஷான் மசூத்(3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதபின் இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌத் ஷகீல் 22 ரன்களுக்கு அவுட்டானார்.
இருப்பினும் கேப்டன் பாபர் ஆசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 5ஆவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 196 ரன்களை குவித்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பாபர் அசாம் 161 ரன்களை குவிக்க, அகா சல்மான் அபாரமாக பேட்டிங் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது.