
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் பிளெண்டல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் டெவான் கான்வே சதத்தை பதிவுசெய்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 20, கேப்டன் பாபர் ஆசாம் 24 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.