
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி - குல் ஃபெரோசா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குல் ஃபெரோசா 2 ரன்களிலும், முனீபா அலி 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சித்ரா அமீன் 12 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 18 ரன்களுக்கும், துபா ஹசன் 5 ரன்களுக்கும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி 57 ரன்களில் 4 விக்கெட்டுகாளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த நிதா தார் மற்றும் ஃபாத்திமா சனா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதா தார் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாத்திமா சனா 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபோதானி, சுகந்திகா குமாரி மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.