பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முழு தகுதியானது - கேன் வில்லியம்சன்!
அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 53 ரன்களும், கேன் வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு, 19.1 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
Trending
இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முழு தகுதியானது என பாராட்டியுள்ளார்.
இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், “பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்டது, இதன் காரணமாக போட்டியின் துவக்கத்திலேயே எங்கள் மீது நெருக்கடி ஏற்பட்டது. டேரியல் மிட்செல்லின் சிறப்பான பேட்டிங்கின் மூலம் தான் எங்களால் 150+ ரன்களை எட்ட முடிந்தது. ஒரு கட்டத்தில் இதுவே வெற்றிக்கு போதுமான ரன்கள் என நாங்கள் நினைத்தோம்.
ஆனால் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது திட்டத்தை கலைத்துவிட்டனர். பாகிஸ்தான் அணியுடனான இந்த தோல்வி மிகுந்த வேதனையையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இந்த தோல்வியை அவ்வளவு எளிதாக எங்களால் மறந்துவிட முடியாது.
எங்களை விட அனைத்து வகையில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது என்பதே உண்மை. நாங்கள் வெற்றிக்காக இன்னும் கடுமையாக போராடியிருக்க வேண்டும். நியூசிலாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now