ஹாரிஸ் ராவுஃப் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய பிசிபி!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப், எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகல் பலப்பரீட்சை நடத்திய நிலையில், அப்போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 6.2 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேற்கொண்டு பேட்டிங்கின் போது அவர் காயத்தால் களமிறங்க முடியாமல் போனது. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் ஹாரிஸ் ராவுஃப் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
Trending
இந்நிலையில் ஹாரிஸ் ராவுஃபின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்ஆர்ஐ மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனை முடிவில், ஹாரிஸ் ராவுஃபிற்கு காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது காயம் பெரியதல்ல, மேலும் பிப்ரவரி 19 அன்று கராச்சியில் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனது காயத்தில் இருந்து குணமடையும் வகையில், பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட மட்டார்" என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஹாரிஸ் ராவுஃப் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. இது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் அணி தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதன்பின் பிப்ரவரி 23ஆம் தேதி பரம எதிரியான இந்திய அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் பிப்ரவரி 27ஆம் தேதி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.
Win Big, Make Your Cricket Tales Now