இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; பாக். கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இம்ரான் கான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராகவும் ஆட்சிசெய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இம்ரான் கான் பாகிஸ்தானில் உண்மையான சுதந்திரம் என்ற நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார் . இந்த பயணத்தின் போது இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
Trending
இதில் பலத்த காயமடைந்த இம்ரான் கான் குண்டு துளைக்காத வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் உயிர் பிழைத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் சுட்டதில் குண்டு இம்ரான் கான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பேசிய இம்ரான் கான், தமக்கு இறைவன் மறு பிறவியை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். தாம் திரும்பவும் நலமுடன் வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இறைவன் எங்களின் கேப்டனையும் பாகிஸ்தான் மக்களையும் பாதுகாக்கட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று முன்னாள் கேப்டன் வசீம் அக்கரம் விடுத்துள்ள செய்தியில், “வசிராபாத்தில் நடைபெறும் சம்பவம் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளது. என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இம்ரான் பாய் மற்றும் அனைவருக்கும் இருக்கும். ஒரு நாடாக நாம் அனைவரும் இணைந்து இது போன்ற சம்பவத்தை நடக்காமல் நமது தேசிய ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.
இதேபோன்று முகமது ஹபீஸ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கின்றேன். இம்ரான் பாய் பாதுகாப்பாக இருந்து மீண்டும் நலமுடன் திரும்ப வேண்டும் என நான் துவா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் சோயிப் அக்தர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தற்போது அவர் நலமுடன் இருப்பதை அறிகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. இந்த தாக்குதலுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now