NZ vs PAK: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது.
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கான்வே 14 ரன்னுக்கும், ஆலன் 12 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இதில் பிலிப்ஸ் 29 ரன்னுக்கும், வில்லியம்சன் 59 ரன்னுக்கும், சாம்பன் 25 ரன்னுக்கும், நீஷம் 17 ரன்னுக்கும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Trending
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நஷீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும், சதாப் கான், நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 15 ரன்களிலும், ஷான் மசூத் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வானும் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் - ஹைதர் அலி இணை ஓரளவு சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் 31 ரன்களில் ஹைதர் அலி ஆட்டமிழக்க, அடுது வந்த ஆசிஃப் அலியும் பெரிதளவில் சோபிக்காமல் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நவாஸுடன் ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மதும் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாச, முகமது நவாஸ் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையும் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now