
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஒமைர் யூசுஃப் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 24 ரன்களைச் சேர்த்திருந்த சைம் அயூப்பும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய உஸ்மான் கானும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் கேப்டன் சல்மான் அலி ஆகா 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், 39 ரன்களை எடுத்திருந்த உஸ்மான் கானும் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தயாப் தாஹிர் மற்றும் இர்ஃபான் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தயாப் தாஹிர் 39 ரன்களையும், இர்ஃபான் கான் 27 ரன்களையும் சேர்த்தனர்.