ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மண்ணில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக விளையாடும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு முதல் அணியாக வெளியேறும் தருவாயில் இருக்கிறது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக படுதோல்வியை சந்தித்தது.
அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 10 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவறவிட்டதால் 163 ரன்கள் அடித்த டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு 2ஆவது தோல்வியை பரிசளித்தார். அதனால் பின்னடைவை சந்தித்த அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.
அதனால் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிர்கொண்ட பாகிஸ்தான் மீண்டும் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் 4 தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.