
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் எமோன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர்.
இதில் தன்ஸித் ஹசன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களைச் சேர்த்திருந்த பர்வேஸ் ஹொசைன் எமொனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் தாவ்ஹித் ஹிரிடோ 25 ரன்களையும், லிட்டன் தாஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.