ENG vs PAK: பாகிஸ்தான் அணியிலிருந்து ஹசன் அலியை விடுவித்தது பிசிபி!
இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
Trending
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருபெரும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி விலக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுண்டி கிரிக்கெட்டில் ஹசன் அலி தனது கடமைகளை தொடர அனுமதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில், ஹாரிஸ் ரவுஃபின் காயம் கரணமாக ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹாரிஸ் ராவுஃபிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கூடுதல் வீரராக ஹசன் அலி இடம்பிடித்தார். மேற்கொண்டு அயர்லாந்து தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய ஹசன் அலி மூன்று ஓவர்களை வீசி அதில் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 42 ரன்களைக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியானது இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now