
ஐக்கிய நாடுகளில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டியில் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. முன்னதாக நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரின் உதவியால் கிடைக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் முக்கிய அணிகளுக்கு எதிராக முதல் தர அணியையும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக இளம் வீரர்களுடன் கூடிய 2ஆவது தர அணியையும் களமிறக்கி இந்தியா வெற்றி கண்டு வருவதை அனைவரும் அறிவோம்.
அந்த நிலையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று மார்தட்டி வரும் பாகிஸ்தான் அதை சோதித்துப் பார்க்கும் வகையில் இந்த தொடரில் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தான் என்ன செய்து விடப் போகிறது என்ற மேலோட்டமான எண்ணத்துடன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து 2023 பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களை களமிறக்கியது.
ஆனால் ஏற்கனவே கடந்த ஆசிய கோப்பையில் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தங்களை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கொடுத்த தோல்வியை மறக்காமல் வைத்திருந்த ஆஃப்கானிஸ்தான் இம்முறை அதே மைதானத்தில் முதல் போட்டியில் 93 ரன்களுக்கு சுருட்டி வென்று தக்க பதிலடி கொடுத்தது. அத்துடன் 4 ஒருநாள் மட்டும் 3 டி20 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் அந்த அணியை 130 ரன்களுக்கு கட்டுப்படுத்தி பின்னர் 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.