
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் டெல்லி ரஞ்சி அணியிலும், ஷுப்மன் கில் பஞ்சாப் ரஞ்சி அணியில் இணைந்துள்ளனர். அதன்படி, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் ரஞ்சி டிராபியின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.