
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் இந்திய அணி வீரர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கிவுள்ளது. அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியில் இணைந்து விளையாடுவதை உறுதிசெய்துள்ளார். மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் உள்ளிட்டோரும் ரஞ்சி தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.