
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தாடுமாறி வருகிறார். இத்தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீர்ர்கள் ஏலத்தில் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரூ.27 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து ஏலம் எடுத்திருந்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையையும் பெற்றிருந்தார். மேற்கொண்டு அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. ஆனால் ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் மொத்தமாகவே 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.