
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த நடத்திர வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இன்று வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இன்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த பாட் கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் பாட் கம்மின்ஸ் வீழ்த்தும் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டாகவும் இது அமைந்தது.
முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திலும் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன்படி இன்றைய போட்டியின் 18ஆவது ஓவரை வீசிய கம்மின்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கானின் விக்கெட்டையும், அதன்பின் இன்னிங்ஸின் 20ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் கரிம் ஜனத் மற்றும் குல்பதின் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் எனும் வரலாற்று சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றிலும் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளது.