
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று தொடரை சமன்செய்தன. இருப்பினும் கடந்த முறை ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதால், தற்போது ஆஷஸ் கோப்பையானது ஆஸ்திரேலிய அணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியானது தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுடன் விளையாடவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை அதன் கிரிக்கெட் வாரியம் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது . இதில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிராக விளையாட உள்ள போட்டிகளில் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளதாக ஆஸ்திரேலியா அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .