
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ரிஷாத் ஹொசைன் அகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்ட்ன நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாண்டோ 41 ரன்களிலும், ஹிரிடோய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறிய காரணத்தால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.