WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார்

Pat Cummins Records: தென் அப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 138 ரன்னிலும் என ஆல் அவுட்டானது. இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
300 டெஸ்ட் விக்கெட்டுகள்
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் தனது பெயரில் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 8ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
- 708 – ஷேன் வார்ன் (273 இன்னிங்ஸ்)
- 563 – க்ளென் மெக்ராத் (243 இன்னிங்ஸ்)
- 553 – நாதன் லியோன் (254 இன்னிங்ஸ்)
- 384 – மிட்செல் ஸ்டார்க் (185 இன்னிங்ஸ்)
- 355 – டென்னிஸ் லில்லி (132 இன்னிங்ஸ்)
- 313 – மிட்செல் ஜான்சன் (140 இன்னிங்ஸ்)
- 310 – பிரட் லீ (150 இன்னிங்ஸ்)
- 300* – பாட் கம்மின்ஸ் (126 இன்னிங்ஸ்)
WTC 2023-25 இல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
இது தவிர்த்து இப்போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பும்ராவின் சாதனையையும் முறியடித்தார். முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா 15 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பாட் கம்மின்ஸ் 18 போட்டிகளில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
WTC 2023-25 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- ஜஸ்பிரித் பும்ரா - 15 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 77 விக்கெட்டுகள்
- பேட் கம்மின்ஸ் - 18 போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் 79 விக்கெட்டுகள்
- மிட்செல் ஸ்டார்க் - 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் 74 விக்கெட்டுகள்
- நாதன் லையன்- 17 போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகள்
ஐசிசி இறுதிப்போட்டிகளில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சு
மேற்கொண்டு இந்த போட்டியின் மூலம் ஐசிசி இறுதிப்போட்டிகளில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் தனது சாதனையையும் பாட் கம்மின்ஸ் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி இறுதிப் போட்டியில் ஒரு கேப்டனின் சிறந்த பந்துவீச்சு
- 5/28* : பாட் கம்மின்ஸ் vs தென் அப்பிரிக்கா, 2025 (WTC)
- 3/83 : பாட் கம்மின்ஸ் vs இந்தியா, 2023 (WTC)
- 2/6 : டேரன் சம்மி vs இலங்கை, 2012 (T20 WC)
- 2/34 : பாட் கம்மின்ஸ் vs இந்தியா, 2023 (ODI WC)
- 2/38 : ஆலன் பார்டர் vs இங்கிலாந்து , 1987 (ODI WC)
இறுதிப்போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு
இந்த இன்னிங்ஸில் கம்மின்ஸ் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐசிசி இறுதிப்போட்டிகளில் (ஆடவர் மற்றும் மகளிர்) சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை அன்யா ஷ்ரப்சோல் 2017அம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 46 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஐசிசி இறுதிப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் (ஆடவர் மற்றும் மகளிர்)
- 6/28 – பாட் கம்மின்ஸ் vs தென் ஆப்பிரிக்கா, WTC 2025*
- 6/46 – அன்யா ஷ்ரப்சோல் vs இந்தியா, WC 2017
- 5/30 – ஜாக்ஸ் காலிஸ் vs வெஸ்ட் இண்டீஸ், CT 1998
- 5/31 – கைல் ஜேமிசன் vs இந்தியா, WTC 2021
- 5/38 – ஜோயல் கார்னர் vs இங்கிலாந்து, WC 1979
Win Big, Make Your Cricket Tales Now